வெண்ணாறு, வெட்டாறு ஆகிய இரு நதிகளுக்கு இடையில் திட்டாக இருப்பதால் 'திட்டை' என்னும் பெயர் வழங்கப்படுகிறது. தற்போது நவக்கிரகங்களுள் ஒன்றான 'குருபகவான்' சிறப்புத் தலமாக அறியப்படுகிறது.
மூலவர் "வசிஷ்டேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். 'பசுபதீஸ்வரர்', 'தேனுபுரீஸ்வரர்' என்னும் திருநாமங்களும் உண்டு. கருவறை மேல் சந்திரக் காந்தக்கல் உள்ளதால் மேலிருந்து 25 நிமிடங்களுக்கு ஒருமுறை நீர்ச்சொட்டு இறைவன் மீது விழுகின்றது. அம்பிகை 'சுகந்த குந்தளாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். அவரும் சிறிய வடிவம். 'உலகநாயகி', 'மங்கள நாயகி' என்றும் போற்றப்படுகின்றாள்.
சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில் குருபகவான் சன்னதி உள்ளது. குருப்பெயர்ச்சி நடைபெறும் காலங்களில் பக்தர்கள் பெருமளவு வந்து வழிபடுகின்றனர்.
மகாவிஷ்ணு, வசிஷ்டர், கௌதமர், ஆதிசேஷன், தேவர்கள் மற்றும் வேதங்கள் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|